தெலுங்கு சினிமா புராண கதைகளை அடிப்படையாகக் கொண்டு பிரமாண்டமாக படங்கள் எடுத்து வருகிறது. ஹனுமன், கண்ணப்பா படங்களைத் தொடர்ந்து இப்போது மிராய் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த படம் அசோகர் காலத்தில் நடக்கும் கதை. அசோகர் சாகாவரம் அடையும் ரகசியத்தை ஒன்பது புத்தகங்களில் மறைத்து, அதை பாதுகாப்பதற்காக ஒன்பது வீரர்களை நியமிக்கிறார். அந்த சக்தியைப் பெற தீய சக்தியான சூனியக்காரன் மகாபீர் முயற்சிக்கிறார். இதை தடுக்க சாதாரண இளைஞன் வேதா முன்வருகிறார். மகாபீரை வீழ்த்த ‘மிராய்’ என்கிற ஆயுதத்தை கைப்பற்றவேண்டும் என்பதே கதை.
நாயகனாக தேஜா சஜ்ஜா தனது நடிப்பால் கவர்ந்துள்ளார். வில்லனாக மனோஜ் மஞ்சு சக்திவாய்ந்த தோற்றத்தைக் கொடுத்துள்ளார். ரித்திகா நாயக், ஸ்ரேயா, ஜெயராம் ஆகியோரும் கதைக்கு வலிமை சேர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. கார்த்திக் கட்டமனேனியின் கேமரா வேலை பாராட்டத்தக்கது. இசையமைப்பாளர் கெள்ரா ஹரியின் பின்புல இசையும் படத்தின் பிரம்மாண்டத்தை உயர்த்துகிறது.
இயக்குனர் கார்த்திக் புராணக் கதையை ஆன்மீகத்துடன் சேர்த்து வணிக ரீதியாக சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார். குறிப்பாக இடைவேளைக்குப் பிறகு படம் அதிகம் ஈர்க்கிறது.
மொத்தத்தில், மிராய் ஒரு சிறந்த புராண கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது.
BlackPepperNews News Magazine