மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெறும் பாரம்பரிய விளையாட்டான கிடா சண்டை, வெறும் போட்டியாக அல்ல;
ஆண்களின் மானம், கௌரவம், வீரியம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
பயிற்சி பெற்ற கொம்புள்ள கிடாக்கள், தலையால் முட்டி அடிபணியும் வரை மோதும் இந்த சண்டையில்,
தங்கள் கிடாவின் வீரத்தின் மீது நம்பிக்கை வைத்து மனிதர்கள் தங்களது பெயரையும் கௌரவத்தையும் பந்தயம் வைக்கிறார்கள்.
இந்த கிடா சண்டைகளை நடத்தும் அமைப்பின் தலைவராக வஸ்தவி (மதுசூதன ராவ்) இருக்கிறார்.
அவருடைய மனைவியின் தம்பியான காப்ரா கார்த்தி (ரிதன் கிருஷ்ணாஸ்) அகந்தையும் ஆணவமும் நிறைந்தவர்.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் கிடா சண்டைகளில்,
காப்ரா கார்த்தியின் “அணுகுண்டு” என்ற கிடா மற்ற கிடாக்களைத் துவம்சம் செய்து எப்போதும் வெற்றி பெற்று வருகிறது.
வெற்றிக்கான பரிசாக வழங்கப்படும் மதிப்புமிக்க “ஜாக்கி” எனும் சங்கிலியை அணிந்து,
காப்ரா கார்த்தி பெருமிதத்துடன் வலம் வருகிறார்.
இந்நிலையில், உசிலம்பட்டியில் நடைபெறும் கிடா சண்டையில்,
அணுகுண்டு மீண்டும் ராஜாவாக களமிறங்கி எதிர்கொண்ட கிடாவை வீழ்த்தி,
ஜாக்கி சங்கிலியை தக்கவைத்துக் கொள்கிறது.
அதே நேரத்தில், ஆட்டோ ஓட்டுநரான ராமர் (யுவன் கிருஷ்ணா)
போட்டி நடைபெறும் இடத்திற்கு தாமதமாக வருகிறார்.
ஷேர் ஆட்டோவில் வந்ததற்காக, காப்ரா கார்த்தியின் கேலி பேச்சுக்கு ஆளாகிறார்.
கிடா சண்டையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ராமர்,
காப்ரா கார்த்தியின் அகந்தைக்கு முடிவுகட்டும் விதமாக,
தன் கிடா **“காளி”**யை, அணுகுண்டுடன் மோத விடுமாறு சவால் விடுகிறார்.
தன் கௌரவத்தை காக்க வேண்டிய கட்டாயத்தில்,
காப்ரா கார்த்தி அந்த சண்டைக்கு ஒப்புக்கொள்கிறார்.
களத்தில் சாம்பியன் கிடா அணுகுண்டை எதிர்கொள்ளும் காளி,
பதினேழு கடுமையான சுற்றுகளுக்குப் பிறகு,
அணுகுண்டின் ஒரு கொம்பை உடைத்து,
ராமருக்கு மதுரையின் கௌரவமிக்க ஜாக்கி பட்டத்தை பெற்றுத் தருகிறது.
இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத காப்ரா கார்த்தியின் கோபம்,
கொடூரமான பகையாக மாறுகிறது.
அவமானத்தைச் சமாளிக்க முடியாமல்,
ராமருக்கு எதிராக சூழ்ச்சிகளில் ஈடுபடத் தொடங்குகிறார்.
அதே நேரத்தில், எதிர்பாராத விதமாக,
காப்ரா கார்த்தியின் கிடா அணுகுண்டு இறப்பதற்கு
ராமர் காரணமாகிவிடுகிறார்.
பழிவாங்கும் நோக்கில்,
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் கிடா சண்டைக்கு ஏற்பாடு செய்து,
ராமரை கட்டாயமாகப் போட்டியில் கலந்து கொள்ள வலியுறுத்துகிறார் காப்ரா கார்த்தி.
இந்தப் போட்டியில்,
யார் தோற்றாலும், அந்தக் கிடா வெற்றி பெற்றவருக்கே சொந்தம்
என்று கடுமையான பந்தயம் வைக்கப்படுகிறது.
போட்டிக்கு காப்ரா கார்த்தி கொண்டு வரும் புதிய கிடா,
எதிர்பாராத விதமாக காளியை வீழ்த்துகிறது.
தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட,
காளியை காப்ரா கார்த்தி எடுத்துச் செல்கிறார்.
காளியை இழந்த ராமரும், அவரது குடும்பத்தினரும்
ஆழ்ந்த மனவேதனையில் ஆழ்கிறார்கள்.
இதற்குப் பின்னால் திட்டமிட்ட சூழ்ச்சி இருப்பதை அறிந்த ராமர்,
காப்ரா கார்த்தியுடன் நேரடியாக மோதுகிறார்.
தொடர்ந்து அவமானம் அடையும் காப்ரா கார்த்தி,
ராமரின் குடும்பத்தை மிரட்டத் தொடங்குகிறார்.
இந்த பகை, வெட்டு–குத்து வரை வளர்கிறது.
இறுதியாக, ஊர் பெரியவர்கள் தலையிட்டு,
இந்த பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க,
மீண்டும் இருவருக்குமிடையே ஒரு இறுதி கிடா சண்டை போட்டியை அறிவிக்கிறார்கள்.
அந்த இறுதி சண்டையில் என்ன நடந்தது?
யார் வென்றார்?
என்பதே படத்தின் மீதிக் கதை.
நடிப்பு :
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள யுவன் கிருஷ்ணா மற்றும் ரிதன் கிருஷ்ணா,
முன்கோபம், உணர்ச்சிவசப்படுதல், ஆணவம், வெறி என
இரு எதிர் துருவ குணங்களை உடைய வீரர்களைப் போல,
சிறந்த உடல் மொழி, முகபாவனைகள் மூலம்
தேவையான ஆக்ரோஷத்தையும் மிடுக்கையும் வெளிப்படுத்தி
போர்க்களத்தில் மோதும் வீரர்களைப் போல் அசத்தியுள்ளனர்.
கதாநாயகி அம்மு அபிராமியின் கதாபாத்திரம்
கதைக்களத்துடன் முழுமையாக இணைக்கப்படவில்லை என்றாலும்,
தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நியாயத்தை செய்துள்ளார்.
காளி, மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பாத்மன், யோகி,
சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா உள்ளிட்ட
அனைத்து துணைக் கதாபாத்திரங்களின் யதார்த்தமான நடிப்பு
படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
தொழில்நுட்பம் & உருவாக்கம் :
மதுரையின் பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட
கிடா சண்டை காட்சிகள், பார்வையாளர்களை சிலிர்க்க வைக்கின்றன.
இசையமைப்பாளர் சக்தி பாலாஜி,
ஒளிப்பதிவாளர் உதயகுமார்,
படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்,
கவிஞர்கள் சினேகன், ரோகேஷ், லவரதன்,
கலை இயக்குனர் சி. உதயகுமார்,
ஒலி வடிவமைப்பாளர் எம்.ஆர். ராஜகிருஷ்ணன்,
சண்டைப் பயிற்சியாளர் ஜாக்கி பிரபு,
ஆடை வடிவமைப்பாளர் ஜோஷுவா மேக்ஸ்வெல் ஜே,
ஒப்பனை பாண்டிராஜன்,
வண்ணக்கலைஞர் ரங்கா,
வசனங்கள் – டாக்டர் பிரகாபால், சூரிய பாண்டியன், சூர்யா பாலா
ஆகியோரின் பங்களிப்பு,
மதுரை மண்ணின் மணத்தை தொழில்நுட்ப ரீதியாக அழகாக திரையில் பிரதிபலிக்கிறது.
முடிவில் :
மதுரையின் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கிடா சண்டையை மையமாகக் கொண்டு,
கிராமப்புற வாழ்க்கை, மனிதர்களின் மானம், பழிவாங்கும் மனம்,
அன்பு, வன்முறை போன்ற உணர்வுகளை
இரண்டு கிடாக்களின் மோதலின் மூலம் வெளிப்படுத்தி,
விறுவிறுப்பான தருணங்களோடு கலாச்சார உணர்வையும் சேர்த்து
திரைக்கதையை இயக்குனர் டாக்டர் பிரகாபால்
சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் காட்சிப்படுத்தியுள்ளார்.
பிகே7 ஸ்டுடியோஸ் எல்எல்பி சார்பில்
பிரேமா கிருஷ்ணதாஸ், சி. தேவதாஸ், ஜெயா தேவதாஸ்
இணைந்து தயாரித்துள்ள
“ஜாக்கி”,
மண் மணம் மாறாத அதிரடி சினிமாவாக,
கிடா சண்டை காட்சிகளின் விறுவிறுப்பால்
திரையரங்கம் முழுவதையும் அதிரச் செய்து
தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது.
BlackPepperNews News Magazine